×

தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடப்பது உறுதி செய்யப்படும்; பண நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை

சென்னை: தேர்தலில் பண நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு நடத்தப்படும். பணம் பட்டுவாடா நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று முன்தினம் சென்னை வந்தார். சென்னையில், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். இரண்டு நாட்கள் ஆலோசனைக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது: தேர்தலை கண்காணிப்பதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து ேதர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி வரும் அதிகாரிகளை மாறறம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 68,144 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறும். இதில் 66 சதவீதம் வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு வெப்சைட் மூலம் ஒளிபரப்பப்படும். வயதானவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க பார்ம்-12டியை நிரப்பி வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு தேர்தல் அதிகாரியிடம் தரவேண்டும். பணப்பட்டுவாடா தடுக்க தீவிர கண்காணிப்பு இருக்கும். பணப்பட்டுவாடா நடப்பதாக தெரிந்தால் அதை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வாக்காளர் சி-விஜில் என்ற ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பட்டுவாடா நடைபெறும் இடம் குறித்து தகவலாகவோ, புகைப்படத்துடனோ தெரிவிக்கலாம். யார் தகவல் தெரிவித்தது என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல் கிடைத்த 100 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார். அண்டை மாநிலங்களின் எல்லைகளில் 145 சோதனை சாவடிகள் அமைக்கப்படும். பணம் மற்றும் இலவசம் தருவது தடை செய்யப்படும். தேர்தல் நாளின்போது ஏடிஎம்களில் பணம் செலுத்துவது நிறுத்தப்படும்.

அனைத்து விமான நிலையங்களிலும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை கண்காணிக்க மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்படுவது கண்காணிக்கப்படும். தேர்தலில் அதிகாரிகள் பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பணப்பட்டுவாடா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் ஊடகத்தினர் அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் ேதர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டால் முதலில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படும். ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்வதை கடுமையாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிகள் இந்த பணப் பட்டுவாடாவை கண்காணிக்கும். அதுமட்டுமல்லாமல் நேஷனல் பேய்மெண்ட் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆன்லைன் பரிவர்த்தனையை கண்காணிக்கும். கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது என்பது சம்பந்தப்பட்ட கட்சி முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இருக்கும். அங்கீகாரமில்லா கட்சிகளுக்கு சுழற்சி அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்படும். வாக்கு பதிவு இயந்திரம் கடந்த 40 ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது.

ஒப்புகை சீட்டு வழங்கும் நடைமுறையும் ஏற்கனவே இருந்த நடைமுறைபோல் செயல்படுத்தப்படும். ஒப்புகை சீட்டு தொடர்பாக உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் தீர்ப்புகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். வாக்குப் பதிவுக்கு முன்பு தேசிய கீதம் இசைப்பது குறித்து கேட்கிறார்கள். தேசிய கீதம் எங்கெல்லாம், எப்போதெல்லாம் இசைக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படும். தேர்தல் தேதி எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தல் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் தருவது அவர்களின் உரிமை. எந்த வாக்குறுதி சரியானது என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ேதர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. தேர்தல் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடப்பது உறுதி செய்யப்படும்; பண நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner of ,India ,Rajiv Kumar ,Chennai ,Chief Election Commissioner of India ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு...